அடுத்த வாரம் அரிசி இறக்குமதி – வெளியாகியுள்ள தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புகளுக்கான முன்பதிவுகளை வழங்கியுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உரிய அரிசி இருப்புக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் இருப்புக்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் சந்தைகளில் தற்போதுள்ள பல அரிசி வகைகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, 2024 டிசம்பர் 20 வரை, இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முன்மொழிவுக்கு, டிசம்பர் மூன்றாம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நாடு மற்றும் ஏனைய அரிசி வகைகளுக்கு உள்நாட்டு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தற்காலிகமாக நீக்குவது குறித்து அமைச்சரவை பரிசீலித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2024 டிசம்பர் 20 ஆம் திகதி வரை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிகளை பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய, கட்டுப்பாட்டு விலையில் அரிசி இருப்புக்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இன்று (08) காலை முதல் அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த ஒழுங்குமுறை விலையில் சந்தைக்கு அரிசியை விநியோகம் செய்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிசி வியாபாரிகளுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பல்வேறு அரிசி வகைகளுக்கு புதிய அதிகபட்ச சில்லறை மற்றும் மொத்த விலை வரம்புகளை விதிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணித்தார்.
இதன் விளைவாக, பின்வரும் விலைகள் செயல்படுத்தப்படுகின்றன:
* ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை: ரூ. 225, சில்லறை விலை: ரூ. 230
* ஒரு கிலோ வெள்ளை அரிசியின் மொத்த விலை: ரூ. 215, சில்லறை விலை: ரூ. 220
* இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை: ரூ. 220
* ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விலை: ரூ. 235, சில்லறை விலை: ரூ. 240
* ஒரு கிலோ கீரி சம்பா மொத்த விலை: ரூ. 255, சில்லறை விலை: ரூ. 260