ரியாலின் மதிப்பு சரிவு – ஈரான் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்தது

அதிகாரப்பூர்வ நாணயமான ரியால் சரிவு மற்றும் பெருகிவரும் பணவீக்கத்தைத் தொடர்ந்து ஈரான் தனது நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது.
அப்துல் நாசர் ஹம்மாட்டி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 273 உறுப்பினர்களில் 182 பேர் நிதியமைச்சருக்கு எதிராக வாக்களித்ததாக சபாநாயகர் முகமது பக்கீர் கலீஃபா அறிவித்தார்.
ஜனாதிபதி மசூத் பெசாச்சியன் தலைமையிலான அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் தவறான நிர்வாகமே பொருளாதார சரிவுக்கும், ரியாலின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதற்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
நாடாளுமன்ற நடவடிக்கையை அங்கீகரித்த பெசாச்சியன், அரசாங்கம் மேற்கத்திய நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியாலின் மாற்று விகிதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2015ஆம் ஆண்டில், டொலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு 32,000 ஆக இருந்தது.
தற்போது ஒரு டொலருக்கு 930,000 ரியால்கள் மாற்று விகிதம் உயர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி, சர்வதேச தடைகளால் பாதிக்கப்பட்டதிலிருந்து ஈரானின் பொருளாதாரம் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளது.