முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை பெற தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களின் மதிப்பு தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கைகளை பெற தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தையில் காணப்படும் வீடு கடந்த வாரத்தில் அரசாங்கத்தின் மதிப்பீட்டு துறையால் மதிப்பிடப்பட்டதாகவும் குறித்த மதிப்பீடுகளின்படி அதன் மாதாந்த வாடகை 46 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்காமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியும் உத்தியோகபூர்வ ,இல்லத்தை பெறாமலிருக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த முடிவிற்குப் பின்னரே இந்த மதிப்பீடு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா நோக்கங்களுக்காக அந்த இல்லங்களில் சிலவற்றை உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அதன்படி, அந்த வீடுகளை சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.