அரிசி விற்பனையிலிருந்து விலகியிருக்க தீர்மானம் – கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையிலிருந்து விலகியிருப்பதற்கு கொட்டகலை – ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் சிவப்பரிசிக்கான உட்சபட்ச சில்லறை விலையாக 220 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களுக்கு சிவப்பரிசி மற்றும் வெள்ளையரிசி ஒரு கிலோகிராம் 295 ரூபாய் என்ற மொத்த விலையில் புறக்கோட்டை சந்தையில் கிடைக்கப்பெறுகிறது.
இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாதென கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யபட்ட ஒரு கிலோகிராம் அரிசி 235 ரூபாவுக்கு மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுடன் ஒப்பிடும் போது உரிய விலையில் விற்பனை செய்ய முடியாதென கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.