யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு 

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு 

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

மேற்படி ஓட்டுத் தொழிற்சாலை 1990 ஆண்டு காலங்களிலேயே யுத்தம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அந்த தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அது சாத்தியப்படவில்லை.

அந்த வகையில் கடந்த வருடம்  திறைசேரி மூலம் 15 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டு அதனை ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முடியாமற் போயுள்ளது.

எனினும் எமது அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களில் அந்த ஓட்டு தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து  புதிய தலைவர் ஒருவரை நியமித்து அவரது தலைமையில் தற்போது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று (நேற்று) இந்த தொழிற்சாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதுடன் இது வடக்கு மக்கள் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பமாகும்.

அந்த மக்கள் குறைந்த விலையில் ஓடு மற்றும் செங்கற்களையும் அதன் மூலம் கொள்வனவு செய்து கொள்ள முடியும். 5800 ஓடுகள் கொள்ளளவோடு 150 பேருக்கு தொழில் வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்றது.

தேவைப்படும் மேலதிக நிதியை அமைச்சின் மூலம் பெற்று சாத்தியமான வகையில் வெற்றிகரமாக இந்த தொழிற்சாலையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This