கட்டாய தனிமைப்படுத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென விடுவிக்கப்பட்ட தொழிற் சங்கத் தலைவர் கோரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் தற்போதைய பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இது தொடர்பாகச் விசேடமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் சென்ற விடயம் குறித்து தற்போதைய பொலிஸ் மா அதிபர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஏன் இப்படி கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இப்படி மக்களை கொண்டுச்செல்ல முடியுமா? குறைந்தபட்சம் PHIஐ கூட எங்களை பரிசோதிக்கவில்லை. பொலிஸில் கூட பரிசோதிக்கவில்லை, எதுவும் பரிசோதிக்கப்படவில்லை.”
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை 8ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை தொடர்பாக மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்து வந்த வழக்கின் பிரதிவாதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜூலை 2021இல், பௌத்த பிக்குகள் உட்பட அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் குழுவுடன் வலிந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 இற்கு எதிரான போராட்டம் இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நேரத்தில் ஆர்வலர்கள் விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று (ஜனவரி 6)விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, ஆசிரியர் சங்கத் தலைவரும் மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம், முன்னிலை சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்கள் 2021 ஜூலை 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவசக் கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும் ‘இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கம்’ இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தொற்றுநோய் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு பௌத்த பிக்குகள் மற்றும் வயோதிபப் பெண்கள் உட்பட 34 செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அன்றைய தினம் குறித்த குழுவினரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா உத்தரவிட்டிருந்தார். அவர்களை தனிமைப்படுத்த அனுமதி வழங்குமாறு வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் கோரிய போது, அவர்களை தனிமைப்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென நீதவான் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் மீறி, நீதிமன்றத்திலிருந்து பலவந்தமாக குழுவை பஸ்ஸில் ஏற்றி துறைமுக பொலிஸுக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் “தொலைதூர பயணத்திற்கு” தயாராகுமாறு அவர்களுக்கு அறிவித்திருந்தனர்.
பின்னர், தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரை முல்லைத்தீவு விமானப்படை தளத்திற்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைத்தனர்.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் உள்ளிட்டோரின் பிசிஆர் மாதிரிகள் ஜூலை 10ஆம் திகதி பெறப்பட்டதோடு, அன்றைய தினமே அவர்கள் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு எழுதிய கடிதத்தில் வைத்திய இராசாயன விஞ்ஞான நிபுணர்களின் கல்வி நிறுவனம் தெரிவித்திருந்தது.
கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை விமானப்படை தளத்தில் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்தமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்பு காரணமாக எட்டு நாட்களுக்குப் பின்னர் அப்போதைய அரசாங்கம் அவர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.