கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல்

தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தலைமையில் நடைபெற்றபோதே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும்கலந்துகொண்டார்.
பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களுக்கு காலதாமதம் இன்றி உரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டே புதிய நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் கீழ் விவசாயிகள் தமக்கு விரும்பிய இடத்தில் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
தெங்கு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதனை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இளநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக களுத்துறையில் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏனைய பகுதிகளில் இதனை விஸ்தரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட பகுதிகளில் மீள் உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டக் கம்பனிகளிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவ்வாறான இடங்களை பயிர்ச்செய்கைகக்குப் பயன்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிக்கான இந்திய வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.