மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – சட்ட நடவடிக்கையெடுக்க பொதுஜன பெரமுன தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே தற்போது வழங்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.எஸ் அமைப்பு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறிவருகிறது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் வழக்கு தொடர்ந்து நீதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுனவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமாகும். மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்திருந்த பின்புலத்திலேயே அக்கட்சி சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளது.
”2024.10.10 ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த 13 அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 04 புலனாய்வு பிரிவின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணிகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஐ.எஸ் அமைப்பினால் ட்ரோன் கருவி ஊடான குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் திட்டமிட்ட தாக்கதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.” என்றும் மனோஜ் கமகே சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.