பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகள்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், தனி நபர்களை கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைப்பது, அதை ரத்து செய்வது அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க புதிய வரைவுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களையும் விடுவிக்கவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், குறித்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
மேலும் கருத்துச் சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் பேச்சு ஆகியவற்றை தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தும் சட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
இதற்கிடையில், மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு எதிர்வரும் எட்டாம் திகதி முதல் ஒக்டோபர் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.