வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன் போது கட்சியின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.
இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக குறிப்பிட்ட அவர், தனது விருப்பத்தை கட்சிக்கு முறையாக அறிவிக்க உள்ளதாகவும் எனினும், தனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தன்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு தான் முழுமையாக கட்டுப்படுவேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.