மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. ஐதேக முகாம் ஓரணியில் திரள வேண்டும்.
ஐதேகவுக்கென 40 லட்சம் வாக்கு வங்கி உள்ளது. ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியிலேயே நான் ஈடுபட்டுவருகின்றேன்.
இரு தரப்புகளினதும் தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். உதாரணமாக மாகாணசபைத் தேர்தல் வந்தால் ஒரு தரப்பு சார்பில் பொதுபட்டியலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயார். அவ்வாறு போட்டியிட்டால் என்னால் வெற்றிபெற முடியும். இணைவதற்கு இவ்வாறு பல வழிமுறைகள் உள்ளன.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த மனதுடன் தலைமைப்பதவியை எனக்கு வழங்கும் பட்சத்தில் அதனை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றேன்.” – என்றார் நவீன் திஸாநாயக்க.