தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்

தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்

அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி வர்த்தக அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் மூடப்பட்ட சதொச களஞ்சியசாலைகளைத் திறந்து முறையான நெல் கொள்வனவு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,

விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்த அரசாங்கம் என்ற வகையில் அவர்கள் நன்மை பெறும் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில் குளிரூட்டப்பட்ட களஞ்சிய சாலைகள் உருவாக்கப்படுவதுடன் நியாயமான விலைக்கு நெல், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”எதிர்க்கட்சித் தலைவர் விவசாயிகளின் கஷ்டங்கள் தொடர்பில் தெரிவிக்கின்றார். ஆனால் அவர்களது ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்த போது எதையும் செய்யாத எதிர்க்கட்சித் தலைவரே தற்போது விவசாயிகள் தொடர்பில் குரல் எழுப்புகிறார். ரூ. 120 இற்கு நாம் நெல்கொள்வனவு செய்கின்றோம். அவர்களது காலத்தில் மூடப்பட்ட அனைத்து சதொச களஞ்சிய சாலைகளையும் நாம் பிறந்துள்ளோம். அவற்றை நாம் மீண்டும் புனரமைத்துள்ளோம். 50 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை நாம் கொள்வனவு செய்துள்ளோம்.

2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அவர்களால் கைவிடப்பட்ட குளிரூட்டிய களஞ்சியசாலைகளை நாம் மீண்டும் உருவாக்குவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளோம். சிறந்த தரமுடைய உருளைக்கிழங்கு வெங்காயம் போன்றவற்றை நாம் கொள்வனவு செய்கின்றோம்.

பெரிய வெங்காயம் 1 கிலோவுக்கான உற்பத்தி செலவு ரூ. 90 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ரூ. 130 இற்கு பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்கின்றோம். தரமான வெங்காயம் எனில் அடுத்த வருடத்தில் ரூ. 150 இற்கு கொள்வனவு செய்யவும் நாம் தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.

Share This