ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் – தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவமாக இருக்க தயார் – தயாசிறி ஜயசேகர

வீழ்ந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்களால் நிராகரிக்கப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட ஒருவரால் அல்ல, புதிய தலைமை ஒருவரால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் எனவும் புதிய தலைமைத்துவம் அவசியமெனில் அதற்கு தான் தயார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கண்டியில் நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது பதவி வகிக்கும் தவிசாளர் மற்றும் செயலாளர் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களும் நீதிமன்றத்தினூடாக எந்தவொரு சட்டரீதியான அதிகாரமும் கிடைக்கவில்லை.

இன்னுமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை.

அவர்கள் தற்போது கதிரை சின்னத்தை பயன்படுத்தி அதன் மூலம் ஏதாவது ஒரு செயலைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமானது. அதிலும் பெரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. கதிரை சின்னத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டபோது எழுந்த நெருக்கடிகள் பல உள்ளன. நாங்கள் அது தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இரண்டு முறை நீதிமன்றத்தால் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், ஒரு குழுவினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திசாநாயக்க இருவரும் தவறாக நியமிக்கப்பட்டதாகக் கூறி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.

கட்சியின் செயலாளராக சட்டப்பூர்வமாகப் பொறுப்புகளை ஏற்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தேன்.

அந்த தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகு, இலங்கை முழுவதும் சென்று, கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சரியான கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். தீர்ப்பு வேறு விதமாக வந்தால், அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

தீர்ப்பு பெப்ரவரி 7 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது. அந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

Share This