ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?

ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளையே அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

அதற்கு ஏற்றால்போல் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளில் இருந்து விலகி செயல்பட முடியாதென அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமகால அரசாங்கத்துக்கும், தமது கொள்கைகளுக்கும் பாரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்பதை வெளிகாட்டும் முகமாகவும் ஓர் அரசாங்கத்துக்கு உள்ள செல்வாக்கும் சர்வதேச ரீதியில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் இருப்பதாகவும் வெளிகாட்டும் வகையிலான நிகழ்ச்சி நிரலொன்றின் கீழ் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அதன் காரணமாகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்துக்கு முன்பும், பின்பும் இரண்டுமுறை ரணில் விக்ரமசிங்க புதுடில்லிக்கு பயணங்களை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

அதன் பின்னர் கடந்த 16ஆம் திகதி ஓமானில் நடைபெற்ற இந்தியன் ஓசன் மாநாட்டில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜெய்சங்கரை சந்தித்ததற்கு இணையான சந்திப்பு போல் காட்டப்பட்டது.

ஓமானில் விஜித ஹேரத் மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில் இன்று இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொள்ள உள்ளார்.

புதுடில்லியில் இந்திய பிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்க முக்கிய சந்திப்பொன்றை நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், அமைச்சர் விஜித ஹேரத்துடனும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது.

சமகால அரசாங்கம் தமது கொள்கைகளை பின்பற்றுவததாக மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கிலான அரசியல் நகர்வுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதன் பின்புலத்திலேயே பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

சமகால அரசாங்கம் தமது கொள்கைகளின் கீழ் செயல்படுவதாக மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை நிறுத்திவிட்டால் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக மீண்டும் ஸ்திரமான இடத்தை அடைய முடியும் என ரணில் விக்ரமசிங்க கருதுவதாகவும் தெரியவருகிறது.

Share This