ட்ரம்பை கோபப்படுத்தினால் இலங்கையை எவராலும் காப்பாற்ற முடியாது – ரணில் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எப்.பி.ஐ (FBI) இன் கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
நேர்காணலொன்றின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
(எப்.பி.ஐ என்பது புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) ஆகும். இது சட்ட அமுலாக்க மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக அமெரிக்காவின் நீதித்துறைக்குச் செயற்படும் சொந்தமான அரச முகவர்.
உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலையாளிகள், குற்றச் செயல் புரிவோரை கண்டுப்பிடிக்கும்
அமைப்பான இது காணப்படுகிறது.
மேலும், புலன் விசாரணை பிரிவில் உலகிலேயே முதன்மை இடத்தில் எப்.பி.ஐ காணப்படுகிறது. இந்த அமைப்பு அமெரிக்கா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் உளவு மற்றும் புலன் விசாரணை செய்து வருகிறது.)
இலங்கை வேறுபட்ட கதையை ஊக்குவிக்க முயன்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக்கூடும் என்றும், அவர் தனது பதவிக் காலத்தில் உக்ரைனின் தலைமையை நடத்தியது போன்று நடத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ அல்லது இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக்கூடும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாபதியும் நானும் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டோம். விசாரணைகளுக்கு உதவுவதற்காக FBI ஐ நியமித்தார்.
அந்த நேரத்தில்,ட்ரம்ப் FBI உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் போது, ஒரு FBI முகவரும் பங்கேற்றார். ஸ்கொட்லாந்து யார்டும் வந்தது, இங்கிலாந்தும் உதவி வழங்கியது.
சஹ்ரான் ஹாஷிம் தான் மூளையாக செயற்பட்டவர் என்று கூறும் அறிக்கையை நான் நம்புகிறேன். இப்போது, இதை மீண்டும் ஒருமுறை நாம் குழப்பினால், என்ன நடக்கும்? ஜனாதிபதி ட்ரம்பை கோபப்படுத்துவதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும்.
எங்களால் எதுவும் செய்ய முடியாது. இலங்கையில் யாராக இருந்தாலும் சரி,யாரை கோபப்படுத்துவது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க-எஃப்.பி.ஐ அறிக்கை என்னிடம் உள்ளது.
இது தொடர்பாக நாம் மோதலில் ஈடுபட முடியாது. இது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நடந்தது போன்ற ஒரு சம்பவத்திற்கும், கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும்,” என்றார்.