ரணில், சஜித்துடன் கூட்டணி இல்லை

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
” ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்த கொள்கைகளைக்கொண்ட கட்சிகளாகும். இவற்றில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றிலும் மாறுபட்ட கட்சியாகும்.
மேற்படி கட்சிகளினதும், எமது கட்சியினதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.
எனவே, எந்த சூழ்நிலையிலும் எமது கட்சி, மேற்படி இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது. எமது கட்சியின் பயணம் மக்கள் விரும்பும் வகையில் தனிவழியில் தொடரும் .
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் கொள்கைகளை ஏற்கும் தரப்பினர் மாத்திரமே எம்முடன் இணைய முடியும்.
கடந்த காலங்களில் எம்முடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கூட்டணி உறவை தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.