ரணில், மைத்திரி மீண்டும் களத்தில் – அடுத்தகட்ட நகர்வு என்ன?

முன்னாள் ஜனாதிபதிகளாக ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 30ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இது சாதாரணமாக நடந்த சந்திப்பொன்று எனக் கூறியதுடன், அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது சந்திப்பது இயல்பானது என்றும் பதிலளித்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தாலும், இந்த சந்திப்பு அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும், எதிர்கால அரசியல் போக்கு தொடர்பிலும் கலந்துரையாட இடம்பெற்றதென ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.
ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் ஒருபுறம் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளது.
அதன் ஒருகட்டம்தான் ரணில் – மைத்திரி சந்திப்பு எனத் தெரியவருகிறது.
ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்கால செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் என பல்வேறு கட்சிகள் கருதுவதால் அரசாங்கத்துக்கு எதிரான வலுவான கூட்டணியொன்றை உருவாக்க வேண்டுமென்ற தொனியில் பல்வேறு சந்திப்புகள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
ரணில் – மைத்திரி சந்திப்புக்குப் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லான்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி. டொலவத்தே மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் சந்தித்த கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு இணக்கமாகச் செயல்படுவதென கலந்துரையாடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சந்திப்புகளும் தொடர்ந்து இடம்பெற உள்ளதாக ஐ.தே.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் நாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை எழுந்தால் மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியும் என கருதும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியான பேச்சுகளை நடத்தி இணங்கிச் செயல்படுவதற்கான முயற்சிகளை எடுக்க விருப்பத்தில் உள்ளதாகவும் தெரியவருகிறது.