இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார்.
இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.
தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.
ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.
ஆனால், முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் அமைச்சர்கள், எம்.பிகள், அரச நிறுவனங்களில் பிரதானிகளாக மற்றும் அதிகாரிகளாக பணியாற்றிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சமகால அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பின்புலத்திலேயே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் பின்புலத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.