சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் – வசந்த சமரசிங்க
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிவப்பு அரிசியை உண்ணாத மக்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்ந்தளித்தமைலேயே நாட்டில் சிவப்பு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் நாமல் ராஜபக்ச எம்.பி எழுப்பி கேள்விக்கு பதில் அளிக்கும் சந்தர்ப்பத்தை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கியிருந்தார். இதன்போது அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் தெரிவித்தாவது,
”அரிசி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அரசாங்கம் இரண்டு கட்டங்களாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 21ஆம் திகதிவரை அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தோம். இரண்டாம் கட்டமாக குறித்த கட்டுப்பாடுகளை ஜனவரி 10ஆம் திகதிவரை தளர்த்தியுள்ளோம்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையால் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கி வருகிறது. ஜனவரி 10ஆம் திகதிக்குள் மேலும் 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அரிசி சந்தையில் தட்டுப்பாடு இல்லை. அவசியமான அரிசியாக உள்ள சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 20 கிலோ வீதம் மக்களுக்கு சிவப்பு அரிசியை பகிர்ந்தளித்தனர். சிவப்பு அரிசியை உண்ணாதவர்களுக்கு கூட அதனை பகிர்ந்தளித்திருந்தனர். அதனால்தான் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையின் காரணமாகவே ஏனைய அரிசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சதொச, நெற் கொள்வனவு திணைக்களம், கூட்டறவு சங்கங்கள் ஊடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.
ஒன்றரை மாதத்துக்குத் தேவையான நெல்லை கொள்வனவு செய்து அரிசி சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நீக்கும் வகையில் அரிசிகள் விடுவிக்கப்படும். நுகர்வோருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அரசாங்கம் எதிர்காலத்தில் செயல்படும்.” என்றார்.