சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆர்.அஸ்வின் அறிவித்துள்ளர்.
பிரிஸ்பேனில் இடம்பெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
“சர்வதேச ரீதியில் அனைத்து வடிவங்களிலும் இந்திய கிரிக்கெட் வீரராக இது எனது கடைசி ஆண்டாக இருக்கும்” என்று பிரிஸ்பேன் டெஸ்டுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் கூறினார்.
“ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் சில் விடயங்கள் மீதம் இருப்பதாக நான் உணர்கிறேன், அதை வெளிப்படுத்த விரும்புகிறேன், அதனை கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் அதை வெளிப்படுத்துவேன்.
எனது அணி வீரர்களுடன் நான் நிறைய நினைவுகளை உருவாக்கியுள்ளேன். “நிச்சயமாக நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் பேரவை மற்றும் சக அணி வீரர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் நான் என் கடமைகளில் தோல்வியடைவேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
106 டெஸ்ட் போட்டிகளில் 24 சராசரியில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அவர் விளையாடினார், அடிலெய்டில் நடந்த பகல்-இரவு போட்டியில் 53 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இந்த தொடருக்கு முந்தைய தொடரில், சொந்த மண்ணில் இடம்பெற்ற நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், அஸ்வின் 41.22 சராசரியில் ஒன்பது விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
துடுப்பாட்ட வீரராக அஸ்வின் ஆறு சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 3503 டெஸ்ட் ஓட்டங்களை குவித்துள்ளார். 3000 ஓட்டங்களுக்கு மேல் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 11 சகலதுறை வீரர்களில் அஸ்வினும் ஒருவர் ஆவார்.
இதேவேளை, 11 தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன், முத்தையா முரளிதரனுடன் இந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.