மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து தொடர்பாக திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் அரசு தீர்மானமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனிமாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை வலியுறுத்தி தனிமாநில அந்தஸ்து பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆகியோர் மாநில அந்தஸ்து வழங்க தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதன் விவரம்: புதுச்சேரி மாநிலத்துக்கு 15 முறை மாநில அந்தஸ்து வேண்டி சட்டப்பேரவை மூலம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். மத்திய அரசுக்கு அனுப்பியும் நமக்கு அதிகார விடுதலை கிடைக்கவில்லை. புதுச்சேரி முன்எப்போதும் இல்லாத நிதிச்சுமையிலும், நிர்வாக அதிகாரம் இல்லாமல் மற்ற மாநிலங்கள் போல துரித நடவடிக்கை எடுக்க முடியாமலும் உள்ளது.

இதனால் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியாமல் நிர்வாகத் தேக்கத்தில் சிக்கியுள்ளது. கடந்த 2007-ல் தனிக்கணக்கு துவங்கியதில் இருந்து மத்திய அரசு பங்களிப்பு புதுச்சேரிக்கு மிகவும் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ல் அமல்படுத்தப்பட்டது. பிறகு புதுச்சேரி தனது சொந்த வருவாயில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இருந்து புதுச்சேரி நிர்வாகத்துக்கு விடுதலை வேண்டும். மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.” என்றனர்.

இதையடுத்து தீர்மானம் கொண்டு வந்த எம்எல்ஏக்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, “மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் தற்போதைய அரசும், அப்போதைய காங்கிரஸ் அரசும் தர விரும்பவில்லை. விளையாட்டு பொம்மை போல் புதுச்சேரியை நினைக்கிறார்கள். மத்திய அரசு அதிகாரிகள் விருந்தினர் மாளிகை போல் நினைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் உள்ள மத்திய அரசு, மாநிலத்தைக்கூட மாவட்டமாக ஆக்கதான் நினைக்கிறார்கள்.” என்றார்.

அதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் அசோக்பாபு, கல்யாணசுந்தரம், ஜான்குமார், ராமலிங்கம் ஆகியோர் ‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்’ என்று பேசியதற்கு எதிர்த்து நீக்க கோரினர். அதற்கு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் பேரவைத்தலைவர், அமைச்சர்கள் பங்கேற்றனர் என்றார். இதையடுத்து பேரவைத்தலைவர் செல்வம், ‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்’ என்பதை நீக்கவேண்டியதில்லை என்றார்.

இறுதியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “எம்எல்ஏக்கள் தனிமாநில அந்தஸ்தை வலியுறுத்தியுள்ளனர். அரசு, மக்கள் எண்ணமும் அதுதான். ஒட்டுமொத்த கருத்து உருவாகியுள்ளது. அனைவரின் எண்ணமும் தனிமாநில அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்பதுதான். தனிமாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை வலியுறுத்தி தனிமாநில அந்தஸ்து பெறுவோம். இதை தனிநபர் தீர்மானமாக இல்லாமல் அரசு தீர்மானமாக்க வேண்டும்” என்றார். இதையடுத்து அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Share This