மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையிலேயே, எதிரணி தரப்பில் இருந்து மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
“ தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் முறைமை தொடர்பில் சட்டம் இயற்றி தருமாறு ஜனாதிபதி நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, பிரதமர் தலைமையில் விரைவில் குழுவொன்றை நியமிக்குமாறு எதிரணிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன். பழைய முறைமையிலேனும் தேர்தலை நடத்தி, மக்களுக்குரிய ஜனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும்.” எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
