ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வருகையை முன்னிட்டு திருகோணமலையில் போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, “இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.
செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை (Sinhalisation) நிறுத்த வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.”
போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.