ஈழ தமிழர்களை தவாறாக சித்தரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – படத்திற்கு எதிராக போராட்டம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்திற்கு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் திருச்சியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில் குறித்த படத்தில் இலங்கைத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதை தமிழ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.
தமிழ் ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியின் (NTK) நிர்வாகிகள், படத்தைத் திரையிட தடை விதிக்கக் கோரி திருச்சியில் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
“இந்த திரைப்படம் விடுதலைப் புலிகள் (தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்) போராளிகளையும் ஈழத் தமிழர்களையும் இழிவுபடுத்துகிறது. அவர்கள் 30 ஆண்டுகளாகப் போராடி உயிரிழந்தனர்.
எனினும், அவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்களாகக் காட்டப்படுகிறார்கள். இது வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் முயற்சி, இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.
ஈழ தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, பலர் காணாமல் போயுள்ளனர்” “அவர்களைப் புண்படுத்தும் செயல்களைச் செய்ய முடியாது,” என்று அந்த கட்சியின் மாநில பிரச்சாரச் செயலாளர் சரவணன் கூறினார்.
மாவட்டத்தின் ஒரு முக்கிய திரையறங்கு மேலாளரையும் போராட்டக்காரர்கள் சந்தித்தனர், அதன் பிறகு ‘கிங்டம்’ படத்தின் பதாகைகள் அகற்றப்பட்டன.
திரையிடலை நிறுத்துவது குறித்து விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் படத்தின் விநியோகஸ்தர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கௌதம் தின்னனுரி இயக்கிய ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம், விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இலங்கையிலும் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரியான இருந்து உளவாளியாக மாறி, இறுதியில் திவி பழங்குடியினரின் மீட்பராக மாறும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஜூலை 31 அன்று வெளியானது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ‘கிங்டம்’ படத்தின் வசூல் படிப்படியாகக் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.