கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிராக பெப்ரவரி 2ஆம் திகதியே போராட்டம்: ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிராக பெப்ரவரி 2ஆம் திகதியே போராட்டம்: ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி, எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“அரசால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோருவது தொடர்பில், வவுனியா வடக்கைச் சேர்ந்த பொது அமைப்புகளுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நெடுங்கேணியில் நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.” – என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக, வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனவீர்ப்புப் போராட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வவுனியா வடக்கின் பொது அமைப்புகளின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பிரகாரம், முன்னதாக எதிர்வரும் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டத்தை, 02 ஆம் திகதி (திங்கட்கிழமை) மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டு, தீர்மானம் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை, நெடுங்கேணி பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது”- எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் பா. சத்தியலிங்கம், து. ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )