அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்றுள்ளன.

ஓமான் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்பூசைதி இந்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயற்படுகிறார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்று மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், இரு தரப்பினரும் “ஆக்கபூர்வமான மற்றும் சாதகமான கருத்துக்களைப்” பரிமாறிக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

ஒரு இடைவேளைக்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும் என்றும், இதில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்புக்கு பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய இராணுவக் குவிப்புக்கு மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரானும் சூளுரைத்துள்ளது.

இராஜதந்திர ரீதியில் தீர்வை எட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அதேசமயம் ஈரானியத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

தனது சொந்த மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.

இருப்பினும், அணுசக்தித் திட்டம் தொடர்பாக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்ய ஈரான் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )