அரிசி விநியோகத்தில் சிக்கல் – அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது ; நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை விநியோகிக்கும் முறையில் சிக்கல்கள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதனை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் இன்னமும் சந்தையில் அரிசிக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
70ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. சதொச மற்றும் அரச பல்நோக்குக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தனியார் துறையினருக்கும் அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசு எதிர்பார்த்த தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
என்றாலும், அரிசியை விநியோக்கும் முறையில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. அரச தலையீட்டுடன் விரைவாக அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அரிசியை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியார் துறையில் அரசாங்கத்தால் நேரடியான சில தலையீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுகிறது.
இறக்குமதிக்கான கால எல்லை ஜனவரி 10வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதயில் எதிர்பார்த்த அளவான அரிசி சந்தையில் கிடைக்கப்பெறும். மக்களுக்கு உரிய முறையில் அரிசியை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதும் அவசியமாகும். இந்த இரண்டையும் கையாளும் நோக்கில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமையும்.” என்றார்.