சிறப்புரிமைகளும் நாடாளுமன்ற உரைகளும்!

சிறப்புரிமைகளும் நாடாளுமன்ற உரைகளும்!

இலங்கை நாடாளுமன்ற செயற்பாட்டுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாறு பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் 1972இல் இறைமையும் தன்னாட்சியும் உள்ள நாடாக மாறிய பின்னரும் துயரங்களோடு தொடர்கின்றது. இன முரண்பாட்டோடு தொடர்கின்ற வரலாறு அது.

பிரித்தானியர் ஆட்சி காலத்திலிருந்த சட்டவாக்க கழகம், அரசுக் கழகம் என்ற முறைகள் மாற்றப்பட்டு 1948இல் முதன் முறையாக நாடாளுமன்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பிரித்தானிய நாடாளுமன்ற பண்புகளைக் கொண்டதாகவே இலங்கை நாடாளுமன்றம் அமைந்துள்ளது. 1972இல் இலங்கை இறைமையும் தன்னாட்சியும் கொண்ட நாடாக பிரித்தானியாவிடமிருந்து அங்கீகாரம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் யாப்பில் நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்ற பெயரில் இயங்கியது.

1978 இல் உருவான இரண்டாவது அரசியல் யாப்பில் நாடாளுமன்றம் என்ற பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கையின் நாடாளுமன்ற செயற்பாட்டு முறைமைகள் பிரித்தானிய விதிமுறைகளை கொண்டமைந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கும் உரிய நிலையியற் கட்டளைச்சட்டம் பிரித்தானிய நாடாளுமன்ற அமைப்பு விதிகளுக்கு ஒப்பானது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை இதில் மிக முக்கியமானது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் செயற்பாடுகள் அமைந்திருக்கும். நாடாளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் தன் உரையில் குறிப்பிடுகின்ற பல விடயங்களை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த உறுப்பினர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அந்த உரை தொடர்பான மேலதிக கேள்விகளை அல்லது விளக்கங்களை அல்லது மறுப்புகளை வழங்க முடியும்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஒரு உறுப்பினரின் உரைக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில், அது உறுப்பினர்களின் சிறப்புரிமைக்குரிய அம்சமாகும். இதன்பிரகாரம், ஈழ தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகள் பலர் ஆழமான சிந்திக்க கூடிய உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

அதேநேரம், வேறு சில உறுப்பினர்கள் அர்த்தமற்ற உரைகளையும் நிகழ்த்தியிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டங்கள் பற்றியும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் கொடி ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களின் தேசியக் கொடியாக பயன்பாட்டுக்கு வரும் என்று சிவாஜிலிங்கம் நாடாளுமன்றத்தில் அடித்துக் கூறியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்துகின்ற மாவீரர் நாள் உரைகளை அமரர் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழியில் தனது உரையின் போது மேற்கோள்காட்டியிருந்தார். மாவீரர் நாள் உரைகளின் சில குறிப்புகளை சபையில் சமர்ப்பித்திருக்கிறார்.

ஆகவே, தமிழ் உறுப்பினர்கள் பலர் ஈழ விடுதலை போராட்டம் தொடர்பாக ஆக்ரோஷமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசியிருக்கின்றனர்.

சில உரைகள் நிலையியல் கட்டளைச்சட்டங்களின் பிரகாரம் சபாநாயகருக்கு முறையிட்டு ஹன்சார்ட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக வட மாகாணத்திலுள்ள 40,000 இராணுவத்தினரையும் சடலங்களாக சவப்பெட்டிக்குள் வைத்து அனுப்புவோம் என்று செல்வராஜா கஜேந்திரன் 2004ஆம் ஆண்டு தனது முதலாவது உரையில் ஆவேசமாக கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிட்டு அந்த வாசகத்தை ஹன்சார்ட் பதிவுப் புத்தகத்திலிருந்து நீக்கம் செய்தனர். அந்த வாசகங்கள் எந்தவொரு ஊடகங்களிலும் வெளிவரக்கூடாது எனவும் சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், அந்த உரைக்கு எதிராக கஜேந்திரன் மீது எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் போது கஜேந்திரன் நாடாளுமன்ற சபா மண்டபத்திற்கு முன்னாள் தீபம் ஏற்றியிருந்தார். ஆனால், அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் அது ஒரு பெரும் விவகாரமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சிங்கள நாளிதழ்களிலும் விமர்சிக்கப்பட்டன. ஆகவே, சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் நிகழ்த்துகின்ற உரைகள், செயற்பாடுகள் எந்தவித பயன்பாடுகளையும் தரப்போவதில்லை.

ஆனால், சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய அறிவுபூர்வமான மற்றும் ஆதாரங்களோடு நிகழ்த்தப்பட்ட பல உரைகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாறுகளுக்கு ஆதாரமாக சான்று பகர்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சமர்பிப்பதற்கு, ஆதரங்களாக காண்பிப்பதற்கு அந்த உரைகள் பயன்பட்டு இருக்கின்றன.

ஆகவே, சர்வதேச அரசியலையும் சர்வதேச சட்டங்களையும் நுட்பமாக ஆராய்ந்து நிகழ்த்துகின்ற உரைகளும் நியாயமான ஆதாரங்களோடு எடுத்துக்கூறுகின்ற நாடாளுமன்ற உரைகளுமே இன்றைய அவசியத் தேவையாகும். இதைவிடுத்து, அர்த்தமற்ற உணர்ச்சி வெளிப்பாடுகளும் பயனற்ற ஆவேச பேச்சுக்களும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியமற்றவை. தமிழர்களின் சுயமரியாதையும், சுய நிர்ணய உரிமையும் நியாயப்படுத்த வேண்டுமானால் சமகால புவியியல் அரசியல் நிலமைகள் நன்கு ஆராயப்பட வேண்டும்.

மாறாக, கட்சி அரசியல் பிரமுகர் செயற்பாடுகள் மற்றும் பிரபல்யத்துக்கான வியூகங்களை மாத்திரம் வகுத்து நாடாளுமன்றத்துக்குள் உரையாற்றுவதும் செயற்படுவதும் தமிழ் நாகரிகத்திற்கு பெரும் அவமானம். மக்கள் நம்பிக்கையோடும் உணர்வோடும் வழங்கிய வாக்குகளை தங்கள் பிரபல்ய சித்து விளையாட்டுக்களுக்காக பயன்படுத்தும் உறுப்பினர்களை மக்கள் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சாயம் பூசிக்கொண்டும் அதேநேரம் வேண்டுமென்றே தமிழ்த் தேசிய கோட்பாட்டை மலினப்படுத்தும் வெளிச் சக்திகளின் வியூகத்துக்கு அமைவாகவும் செயற்படும் உறுப்பினர்களையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

அதேவேளை, இலங்கையின் ஒற்றையாட்சி நாடாளுமன்றம் என்பது தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெறக்கூடிய இடம் அல்ல என்பதையும் உணர வேண்டும். நாடாளுமன்றம் ஒரு பேச்சு மேடை. ஆகவே, இலங்கை நாடாளுமன்றத்துக்கு வெளியில் நின்று தீர்வு காண வேண்டும் என்ற தமிழ்த் தேசிய கோட்டபாட்டுக்கு வலுச் சேர்க்கும் கட்டமைப்புகள் தான் இன்றைய தேவையாகும்.

 

( ஒருவன் ஞாயிறு வாரஇதழின் ஆசிரியர் தலையங்கம்)

Share This