ஈக்குவடோரில் சிறைச்சாலையில் கலவரம் – 14 பேர் பலி

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தல் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த மோதலில் கைதிகளும் கொல்லப்பட்டனர். இதன்படி மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்தனர். இதனை காவல் துறை தலைவர் வில்லியம் கல்லே உறுதிப்படுத்தியுள்ளார்.
கைதிகள் உள்ளே இருந்து கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டுகள், எறிகுண்டுகளையும் வீசி வன்முறையில் ஈடுபட்டனர். சில கைதிகள் தப்பி விட்டனர்.
அவர்களில் 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என அவர் கூறினார். 40 நிமிடங்களுக்கு பின்னர், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிகாரிகள் சிறையை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர் எனவும் அவர் கூறினார்.
ஈகுவேடாரில் லாஸ் கொனரோஸ் மற்றும் லாஸ் லோபோஸ் ஆகிய இரு பெரும் போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறைகளில் அடிக்கடி மோதி கொள்வார்கள். இந்நிலையில், அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். 2021-ம் ஆண்டு சிறையில் நடந்த மோதலில், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பலியானார்கள்.
2021-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இதுவரை 500 கைதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்களும் நடந்துள்ளன.