கதவடைப்பு போராட்டத்திற்கு கடைகளை மூடுமாறு அழுத்தம்!! மட்டக்களப்பு மாநகர மேயருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

வடக்கு கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு கூறிய மட்டக்களப்பு மாநகர மேயர் மக்கள் எதிர்ப்பை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியிருந்தார்.
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், குறிப்பிட்ட சில இடங்களை தவிர்ந்த பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல் இயங்கியிருந்தன. பொது மக்களும் தங்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நகரில் திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு அழுத்தம் கொடுத்த தமிழரசு கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து வெளியேறினார்.
குறிப்பாக பொது மக்களின் வரிப்பணத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு, அரச வாகனத்தில் வந்து கடைகளை மூடுமாறு எப்படி கூறமுடியும் என பொது மக்கள் கேள்வியெழுப்பினர்.
எரிபொருள் நிரப்பியது யாருடைய பணத்தில் எனவும் சரமாரியாக கேள்வியெழுப்பினர். இதனை சமாளிக்க முடியாமல் தடுமாறிய மேயர் அங்கியிருந்து உடனடியாக தனது வாகனத்தில் ஏறி சென்றிருந்தார்.
இந்நிலையில், கடைகளை மூடுமாறு அழுத்தம் கொடுத்தமைக்காக நபர் ஒருவர் மட்டக்களப்பு மேயருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பில் முழு அளவில் யாரும் ஆதரவு வழங்கவில்லை எனவும், பெரும்பாளான பகுதிகள் வழமைப் போல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.