கண்டிக்குச் சென்று யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு (ஏப்ரல் 24) கண்டிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் ‘சிறி தலதா வந்தனாவ’ புனித தந்த தாது கண்காட்சியை வழிபட வந்துள்ள யாத்ரீகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
புனித தந்த தாது கண்காட்சியை வழிப்பட இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் கண்டி நகரில் கூடியுள்ளனர். யாத்ரீகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளமையால் தற்போது குழுமியுள்ள பக்தர்கள் வழிபாடுகளை முடிக்கும் வரை ஏனைய பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு கண்டி நகருக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழிபாடுகளில் ஈடுபட வரிசையில் காத்திருக்கும் யாத்ரீகர்களின் தேவைகள் மற்றும் நலன்களை விசாரிக்க ஜனாதிபதி நேற்று இரவு கண்டி நகரின் பல இடங்களுக்குச் சென்றிருந்தார்.
‘சிறி தலதா வந்தனாவா’ இன்று (ஏப்ரல் 25) தொடர்ச்சியாக எட்டாவது நாளாகத் ஆரம்பமாக உள்ளது. வழிபாடுகள் காலை 11.00 மணிக்குத் தொடங்குகின்றன.
400,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அதிக அளவில் வருகை தருவதால், அதிகப்படியான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இன்று கண்டிக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.