டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்

டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என கூறியது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.