பொலிஸ் ஆணைக்குழு தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ‘அதிருப்தி’

பொலிஸ் ஆணைக்குழு தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ‘அதிருப்தி’

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக திருடர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட காரணத்தை தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி, தமது கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரின் இடமாற்றங்களை மேற்கொள்ளாத பொலிஸ் சேவை பரிந்துரைகள் தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுவிற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பில் அறிந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளை இடமாற்றம் செய்தமை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் காரணங்களில் ஒன்றாகும்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பழைய விசாரணைகள் தொடர்பான தகவல்களை அறிந்த அதிகாரிகள் மீண்டும் அந்தத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட வேண்டுன்றாலும், பொலிஸ் ஆணைக்குழு ‘இழுத்தடிப்பு’ செய்வதாகக் கூறும் ஜனாதிபதி, ஆணைக்குழு தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்கவின் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ தேர்தல் விஞ்ஞாபனத்தில், பொலிஸ் சேவையில் அரசியல் மயப்படாமல் சகல நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்களை செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது.

“இப்போது பொலிஸாரை எமக்கு வேண்டிய வகையில் இடமாற்றம் செய்ய முடியாது. அதற்கென்று ஒரு பொலிஸ் ஆணைக்குழு இருக்கிறது. ஆணைக்குழுவில் அந்த இடமாற்றங்களை செய்ய வேண்டும். சிலருக்கு அந்த ஆணைக்குழுவில் போதுமான அளவு செய்யவில்லை. அதில் எனக்கும் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆணைக்குழுவின் தலைவர்களுக்கு நான் கூறுகின்றேன்,” என ஜனாதிபதி களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள 17 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கை தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிய போதே ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியலுக்கு அமைய, 17 பேர் பொலிஸாரின் ‘சாதாரண கடமைகளுக்காக’ இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்தை பரவலாக்கும் முதன்மை நோக்கத்துடன் நிறுவப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபர் அல்லாத பொலிஸ் அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் வகையில் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றுமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடந்த ஜனவரி 19ஆம் திகதி மேலும் தெரிவித்திருந்தார்.

“நாங்கள் இந்த இடமாற்றங்கள் எதனையும் எங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகக் கோரவில்லை, தனியார் வியாபாரத்திற்காக அல்ல. மக்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றும் நோக்கத்தில் இந்த இடமாற்றங்களைக் கோருகிறோம். எனவே, அந்த இடமாற்றங்களை ஆணைக்குழு நியாயமாகச் செய்யும் என்று நம்புகிறோம். .”

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓரளவுக்கு சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, திறமையான அதிகாரிகள் ஏற்கனவே பணிகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“இப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை திறமையான, நேர்மையான அதிகாரிகளுடன் ஒரு குறிப்பிட்ட சரியான இடத்தில் வைத்துள்ளோம். அவர்கள் இப்போது பணிகளை தொடங்கியுள்ளனர்.”

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஈ.டபிள்யூ.எம். லலித் ஏக்கநாயக்க தலைமையிலான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் டி.கே.ரேணுகா ஏகநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன், சட்டத்தரணி தில்ஷான் கபில ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இல்யாஸ் மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த ஜயசிங்க ஆகியோர் செயற்படுகின்றனர்

Share This