சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் – ஜனாதிபதி

சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் – ஜனாதிபதி

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது எனினும் சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போது ஜனாதிபதி விசேட உரையாற்றி வரும் நிலையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போதைய பேரிடர் சூழ்நிலை தேசத்தை ஒன்றிணைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகிறார்கள்.

இந்த அனர்த்தத்தின் போது  இலங்கை மக்களின் முழுமையான மனிதாபிமானத்தை நாங்கள்  கண்டிருக்கின்றோம். எந்தவொரு அனர்த்தத்தினாலும் வீழ்த்த முடியதாத உறுதியான மனிதாபிமானத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம்.

எமது நாட்டின் சிறு பிள்ளைகள் தாங்கள் சேர்த்து  வைத்த சிறு உண்டியலில் இருக்கும் பணத்தை நிவாரணப் பணிகளுக்காக கொடுத்திருக்கின்றனர்.  எமது நாட்டில் ஒரு தந்தை தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு வாழைக் குழையை நிவாரணமாக கொடுக்கத் தயாராக இருந்தார். இப்படி உறுதியான மனிதாபிமானமுடைய மக்களை எமது நாடு கொண்டிருக்கின்றது.

அதேசமயம், வெளிநாட்டில் இருக்கும் எமது இலங்கையர்கள் இரவு பகல் பாராது உழைத்து எமது தாய் நாட்டிற்காக பணி செய்கின்றனர்.

இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை என்று அறிவித்த போது, கேட்டதை விட பல மடங்கு இரத்ததானம் செய்தனர் எமது மக்கள். அழித்துவிட முடியாத உறுதியான மனிதாபிமானம் எம்மிடம் உள்ளது என்பதை எம்மக்கள் நிரூபித்தனர்.

ஆனால், நான் கண்டிருந்தேன் சில நபர்கள் அந்த மனிதாபிமானத்தை கேலிக்குட்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.

கலாவேவ பகுதியில் வெள்ளத்தில் பேருந்தொன்று அடித்துச் செல்லப்பட்ட பிறகு அவர்களை காப்பாற்ற எமது படையினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், முகப்புத்தகத்தில் விமர்சிக்கும் பலர் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு முறை, இப்போது ஒரு மணித்தியாலம், இப்போது இரு மணித்தியாலம், இப்போது மூன்று மணித்தியாலம் என்று மீட்பு பணியை கேலிக்குட்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அப்போதும் எமது தாய் நாட்டின் படையினர் மீட்பு பணியை விடாது தொடர்ந்து அவர்களை மீட்டெடுத்தனர்.

துணிகரமான நடவடிக்கைகளை அப்போது கடற்படையினர் மேற்கொண்டு பேருந்தில் இருந்த அனைவரையும் ஒரு வீட்டின் கூரை மீது ஏற்றி காப்பாற்றினர்.

மாவிலாறு அணை உடைப்பெடுக்கப் போவதாக அதிகாலை 3 மணிக்கு தகவல் வந்தது. உடனடியாக செயற்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.

அப்போது, இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்ட எமது படையினர் விரைவாக செயற்பட்டு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்களை எழுப்பி, சேருவில பௌத்த விகாரைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

விகாரை உயர்வான பிரதேசத்தில் இருந்ததன் காரணமாக, அங்கு ஆயிரக்கணக்கானவர்களை எம்மால் பாதுகாப்பாக தங்க வைக்க முடிந்தது.

தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் முப்படையினரதும் பொலிஸாரினதும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )