அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய விசேட குழுவை நியமித்த ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் புதிய வரிக் கொள்கை இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், இலங்கைக்கு 44 வீத வரிவிதிப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த விரிவிதிப்பு நிச்சயம் ஆடை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.