ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பல முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன.
அத்துடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (15) பிற்பகல் இந்தியா சென்றதுடன், புதுடில்லி வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.
ஜனாதிபதி தங்கியுள்ள டில்லியில் உள்ள ITC மௌரியா ஹோட்டலில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.