
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்களை அறிவித்த ஜனாதிபதி
2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளையும் அறிவித்தார்.
மேலும், இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இயற்கை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பின்வரும் அறிவிப்புகளை ஜனாதிபதி வெளியிட்டார்,
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 10,500 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணப் பணிகளுக்காக 50 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சீரற்ற வானிலையினால் மொத்தமாக 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,165 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன மற்றும் 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும்.
தற்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் , மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
மேலும், நெல், சோளம் மற்றும் தானிய பயிர்செய்கைக்கு ஹெக்டேருக்கு 150,000 ரூபாய் வழங்கப்படும், வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த காய்கறி செய்கையாளர்களுக்கு ஹெக்டேருக்கு 200,000 ரூபாய் வழங்கப்படும்.
அதேபோன்று, சீரற்ற வானிலையால் முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 50 இலட்சம் ரூபாயும், காணிகள் அற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் காணி ஒன்றும் வழங்கப்படும்.
அவ்வாறு அரச காணிகள் இல்லாவிட்டால் காணி ஒன்றை கொள்வனவு செய்ய 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
அதேபோல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
