தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் உள்ள எல்லைச் சுவரை அகற்றுவது தொடர்பில் மீளாய்வு செய்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்மலானை விமான நிலையத்தில் காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது அடி சுவர் சர்வதேச விமான நிலைய விதிமுறைகளை மீறுவதாக தெரியவந்துள்ளது.
சுவரின் இருப்பிடம் காரணமாக, சிறிய தொழில்நுட்ப பிழையானாலும், சுவரில் விமானம் மோதி பெரும் விபத்து ஏற்படும் என, விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்கம் கூறுகிறது.
இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு மீளாய்வு செய்து மதில் சுவரை அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.
அண்மையில் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமான நிலைய விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுவரில் விமானம் மோதியதில் 179 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.