கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கரூர் சம்பவத்தில் இரு பக்கமும் தவறுகள் உள்ளன. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை.
விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என்பதை பார்த்து செயல்பட வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும்.
தலைவர் என்பவர் எப்போதும் வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். நிதியுதவியையும் நேரில் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.