பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மற்றும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் இரண்டும் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சேதம் மற்றும் பின்அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் நில அதிர்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கதை அடுத்து மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் கடும் பீதியடைந்ததாக தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணமான டாவோ ஓரியண்டலின் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிகாரிகள் களத்தில் நிலைமையை மதிப்பிட்டு வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தயாராகி வருவதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

“உதவி தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக நாங்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம்,” என்று மார்கோஸ் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் உள்ள மனாய் நகருக்கு அருகில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் பிவோல்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவும் அதன் வடக்கு சுலவேசி மற்றும் பப்புவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்ததாக அதன் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 71 பேர் உயிரிழந்த நிலையில், பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இன்னும் நிலநடுக்கங்கள் உணரப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This