மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்படும் சாத்தியம்
கடவுச்சீட்டு வழங்குவதில் உள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் தற்போது கிடைக்கக்கூடிய கடவுச்சீட்டுபிரதிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
எனவே, இந்தப் பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு, அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நிலைமையை ஆய்வு செய்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க அமைச்சரவை ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விலைமனு கோரல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கொன்று தற்போது நடந்து வருகிறது. எனவே வழக்கைப் பாதிக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.