பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி

பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி

ஆர்மேனிய அணிக்கு எதிராக 9–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்மேனிய அணிகள் 2026 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் போட்டியில் ஆர்மேனிய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்ததன் மூலம் ‘எஃப்’ குழுவில் முதலிடம் பிடித்தே போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. எனினும் ரொனால்டோ முந்தைய போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்தப் போட்டி ஆட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத்தில் போர்த்துக்கல் அணி தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பங்கேற்கவுள்ளது. 2016 யூரோ சம்பியனான போர்த்துக்கல் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. எதிர்வரும் உலகக் கிண்ணம் தனது கடைசி உலகக் கிண்ணமாகும் என 40 வயது ரொனால்டோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி நோர்வே இடம் தோல்வியை சந்தித்ததால் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற தொடர்ந்து காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வென்ற நோர்வே ‘ஐ’ குழுவில் முதலிடம் பெற்று உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது.

அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பின்னரே பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் இந்தப் குழுவில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற பிளே ஓப் சுற்றில் ஆட வேண்டி ஏற்பட்டுள்ளது.

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற முன்னணி கால்பந்து அணியான இத்தாலி 2018 இல் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணம் மற்றும் 2022 இல் கட்டாரில் நடந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற தவறிய நிலையில் மீண்டும் ஒரு முறை உலகக் கிண்ணத்திற்கு முன்னேற அந்த அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரேசில், இங்கிலாந்து உட்பட 32 நாடுகள் இதுவரை தகுதிபெற்றுள்ளன. இன்னும் 16 அணிகள் தகுதி பெறவுள்ள நிலையில் இன்னும் பெரும்பாலான அணிகள் ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்தே தகுதி பெறவுள்ளன.

Share This