போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா – வத்திக்கான் தகவல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
88 வயதான போப் பிரான்சிஸ் ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட மார்பு சிடி ஸ்கேன் சோதனையில், இருதரப்பு நிமோனியாவின் தொடக்கத்தைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதல் மருந்து சிகிச்சை தேவைப்பட்டது,” என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போப் “நல்ல மனநிலையில்” இருந்தார் என்றும், “படித்து, ஓய்வெடுத்து பின்னர் பிரார்த்தனை செய்தார்” என்றும் வத்திக்கான் தகவல்கள் தெரிவித்துள்ளன.
போப் பிரான்சிஸ் நலம் விரும்பிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்து, “அவருக்காக ஜெபிக்னுமாறு” கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு பல நாட்கள் மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகள் இருந்தன.
அடுத்த ஜனவரி வரை நடைபெறும் 2025 கத்தோலிக்க புனித ஆண்டிற்கான வார இறுதியில் அவர் பல நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவிருந்தார்,
எனினும், போப்பின் நாட்காட்டியில் உள்ள அனைத்து பொது நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.