
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி- அமெரிக்க நடவடிக்கைக்கு உலகளாவிய எதிர்வினை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவ தளமொன்றிற்கும் அதன் பின் நியூயோர்க்கில் உள்ள தடுப்பு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமமான கராகஸில் (Caracas) நிக்கோலஸ் மதுரோ பதவி நீக்கப்பட்டு அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கடுமையாக கண்டித்துள்ளார். மதுரோவே வெனிசுலாவின் சட்டப்பூர்வமான ஜனாதிபதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் திங்களன்று கூட உள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் “ஆபத்தான முன்னுதாரணம்” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
