
பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பதிவான 92 சதவீத கொள்ளைச் சம்பவங்களைத் தீர்ப்பதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொலைபேசி திருட்டு வழக்குகளில் மட்டுமே சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள புலனாய்வு ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் எந்தவொரு திருட்டுச் சம்பவத்திற்கும் தீர்வு காணப்படவில்லை என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2025ஆம் ஆண்டில் விசாரணை முடிக்கப்பட்ட 184,783 கொள்ளைச் சம்பவங்களில், சந்தேக நபர் அடையாளம் காணப்படாமலேயே 143,000 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
மேலும் 27,500 வழக்குகளில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டும் அவர் மீது வழக்குத் தொடர முடியவில்லை, அதேசமயம் 400 வழக்குகளில் மேலதிக நடவடிக்கை பொது நலனுக்கு உகந்ததல்ல என்று கருதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பிலிப், பொலிஸாரின் செயல்பாட்டை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
