ஊடகவியலாளரை தாக்கிய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ‘தவறிய’ பொலிஸ்
ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சந்தேகநபரை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
ஊடகவியலாளர், வீட்டு முற்றத்தில் வைத்து தன்னை தாக்கிய இருவர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், அவர்களில் ஒருவரை மாத்திரம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார், மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதில் கவனக்குறைவாக செயற்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஜனவரி 15ஆம் திகதி காலை கிளிநொச்சியில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இரண்டு தாக்குதல்தாரிகள் ஊடகவியலாளர் வீட்டின் வாயிற்கதவை உடைத்து தலைக்கவசத்தால் அவரையும் தாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இரணைமடு விவசாய சம்மேளனத்தின் பொருளாளரின் புதல்வர் பி. குரலினியன் மற்றும் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வயல் காணிகளின் கமவிதானை ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர் தனது வீட்டுக்கு வந்த பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் தாம் பெற்ற தகவலின் அடிப்படையில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் பாரிய நிதி மோசடி ஊடகங்கள் மூலம் அம்பலமானமையே தாக்குதலுக்கு காரணம் என சுப்பிரமணியம் பாஸ்கரன் தெரிவிக்கின்றார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் தான் பெற்ற தகவல்களுக்கு அமைய 7,000 உறுப்பினர்களைக் கொண்ட இரணைமடு விவசாய சம்மேளனத்தின் நிதி சொத்து 37 மில்லியன் ரூபாய் எனவும், சம்மேளனம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும், உறுப்பினர்களிடம் சேர்க்கப்பட்ட நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும், கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.
இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழ் வயல்களுக்கு நீரை பகிர்ந்தளிக்கும் கடமைக்கு நியமிக்கப்பட்ட கமவிதானைக்கு நாளொன்றுக்கு 750 ரூபாயே சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் எனினும் சம்மேளனத்தினால் ஒரு மாதத்திற்கு 115,000 ரூபாய் வீதம் ஒன்பது மாதங்களுக்கு அவருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளாகவும், இந்த விடயத்தையும் கடந்த வருட நவம்பரில் தனது நண்பருடன் இணைந்து பல ஊடகங்கள் ஊடாக செய்தியாக வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
விவசாய சம்மேளன உறுப்பினர்களுக்குத் தெரியாமல் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகக் கூறும் சுயாதீன ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன், அந்தத் தகவல்களை வெளியிட்டமையே தான் தாக்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்ததாக தான் நம்புவதாகவும் குறிப்பிடுகின்றார்.
கிளிநொச்சி, ஊடகவியலாளர் வீடு தேடி வந்து தாக்கிய இருவர் குறித்த விபரங்களை பொலிஸாரிடம் வழங்கியபோதிலும், கமவிதானையாக கடமையாற்றுபவர் மாத்திரமே பொலிஸார் கைது செய்து ஜனவரி 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கிளிநொச்சி நீதவான், வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
விசாரணையின் பின்னர், தன்னை தாக்கிய ஒருவரை மாத்திரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது ஏன் என, ஊடகவியலாளர் பொலிஸாரிடம் கேட்டபோது, அறிக்கையை தயாரிக்கும் போது ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த தவறு நிகழந்ததகாவும் எனினும், மற்றைய நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்று வரை (ஜனவரி 21) அவர் கைது செய்யப்படவில்லை என ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் தெரிவிக்கின்றார்