பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
பயங்கரவாதம் என்பது எந்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருவதாகவும் அண்மையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தென்றும் பிரதமர் மோடி
சுட்டிக்காட்டினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.