தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு, சிறி செல்வவிநாயகர் ஆலயம் ஆலயத்தில் இன்று காலை விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பொங்கல் சமர்ப்பித்து, ஜனாதிபதியின் நீண்ட ஆயுளும் நல்லாட்சியும் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் நடைபெற்ற பின்னரே குறைந்தளவிலான சம்பள உயர்வுகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

“நல்லாட்சி காலத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறப்பட்டாலும், அது கூட முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது எந்தவித போராட்டமுமின்றி 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தேயிலை கொழுந்துகளை பறித்து கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் கரங்களை நேரில் தொட்டு அவர்களின் வாழ்வாதார நிலையை கேட்டறிந்த ஜனாதிபதியை இதற்கு முன் தாங்கள் கண்டதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த சந்திப்பு தொடர்பான காட்சிகளை காணொளியில் பார்த்தபோது தாங்கள் மனம் நெகிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பள உயர்வு, தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )