பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன. இருப்பினும் அங்கு மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் பாகிஸ்தான் பெட்ரோலிய துறை அமைச்சர் அலி பெர்வைஸ் மாலிக், “அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நம் தேசத்தில் எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டி உள்ளது.

நமக்கான எரிபொருள் ஆதாரம் மிகவும் குறைந்த அளவில்தான் கிடைக்கிறது. அதனால் இதை தவிர்க்க முடியவில்லை,” என அரசு செய்து தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ரூபாயில் டீசல் விலை சுமார் 54.9 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது ஒரு லிட்டர் 520.35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை சுமார் 137.24 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 458.41  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பெட்ரோல் விலை 42.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதமும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் பாகிஸ்தானில் பணவீக்கம் மேலும் உயரும் சூழல் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் பெற்று வருகிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தற்போதைய நிலையைவிட கடுமையான பொருளாதார நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )