நேற்று முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால், இலங்கை மக்களுக்கு புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (18) முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு இந்திக சம்பத் மெரிஞ்சகே தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், நேற்று முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யக்கூடிய வாகன வகைகள் தொடர்பிலும் தனது கருத்தை வெளியிட்டார்.
இதன்படி, 25 ஆசனங்களுக்கு மேல் மற்றும் ஐந்து வருடங்களுக்கும் குறைவான பழைய பேருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும் என தலைவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறைக்கு தேவையான சிறப்பு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதேவேளை, அடுத்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனியார் வகை வாகனங்கள் மற்றும் ஏனைய வகைப்பாடுகளின் கீழ் உள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர் 14ஆம் திகதி கையொப்பமிட்டதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.